இறைவன் இயேசுவில் அன்பிற்குரியவர்களே,
இன்றைய இறைவார்த்தை வழிபாடானது வினா விடைக்காகவா விவாதிப்பதற்காகவா என்ற மைய சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகின்றது.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பலவிதமான வினாக்கள் நம்முடைய உள்ளத்தில் எழுப்புகின்றோம். ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் அதைப் பற்றிய சரியான புரிதல்கள் வேண்டும் என்று எழுப்பக் கூடிய வினாக்களும் உண்டு, அதே வேளையில் விவாதிக்கப்பட வேண்டும், ஒருவரை சோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வினாக்கள் எழுப்புவதும் உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர் இயேசுவை நோக்கி கேள்வி எழுப்புகிறார். இம்மண்ணக வாழ்வின் உறவு நிலைகளை இறப்புக்கு பின் எவ்வாறு புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு இயேசு கிறிஸ்துவின் பதில் உயிர்ப்பின் வாழ்வைப் பற்றிய தெளிவான புரிதலை நமக்கு கொடுக்கின்றது. இம்மன்னக வாழ்வில் தான் நாம் உறவு நிலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். விண்ணக வாழ்வில் எந்தவிதமான உறவு நிறைகளும் அல்ல மாறாக அனைவருமே ஒரே நிலையில் தான் வாழப் போகின்றோம். அதுவும் வானத்தூதர்களைப் போல இருப்போம் என்ற கருத்தையும் முன் வைக்கிறார். ஆனால் சதுசேயர்களோ ஏற்க மனம் இல்லாத நிலையில்தான் இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் விடைக்காக வினா எழுப்பவில்லை மாறாக விவாதிக்க வேண்டும், இயேசுவின் மீது ஏதேனும் குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.
அன்பிற்குரியவர்களே, இன்று பல நேரங்களில் சதுசேயர்களைப் போலத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்புவதை விட ஒருவரை சோதிக்க வேண்டும், விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் தான் கேள்விகள் கேட்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். அவ்வாறு வாழக்கூடியவர்களாக இல்லாமல் கேள்வி கேட்பது ஒன்றை அறிந்து கொள்ளவும், ஒன்றைப் பற்றிய தெளிவு பெறவுமே என்பதை உணர்பவர்களாக திறந்த மனதுடையவர்களாக என்றும் வாழ்வோம் என்ற உறுதிபாட்டோடு இந்த நாளை இனிதே துவங்குவோம் ஆமென்





.jpeg)


.jpeg)
.jpeg)